ஒருநாள் ஒரு பெண்மணி சுவாமிஜியைப் பார்க்க வந்தார். அவர் தன் கணவர் மீது மிகுந்த மனக்குறை இருப்பதாகக் கூறினார். “என்னம்மா உன்குறை?” என்று மகரிஷி கேட்கிறார்கள். அதற்கு அந்தப் பெண், “என் கணவர் என்னை மிகவும் உதாசீனப்படுத்துகிறார். என்னை மதிப்பதில்லை. என்னிடம் எதையும் கலந்து ஆலோசிப்பதில்லை. அதனால் வரவர எனக்கு இல்வாழ்க்கையே வெறுப்பாகிவிட்டது சுவாமிஜி” என்கிறார்.
சுவாமிஜி அந்தப் பெண்ணிடம், “அம்மா, உங்கள் கணவர் உங்களுக்கு ஏதேனும் நன்மைகள் செய்திருக்கிறாரா? அதை நினைவுபடுத்திக் கூற முடியுமா?” என்றார்கள். சிறிதுநேரம் யோசித்த அவர் தன் வாழ்க்கைக் கதையைத் தொடர்கிறார். “சுவாமிஜி நான் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்பொழுது எனது பெற்றோர்கள் எனக்குத் திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.
எனக்கு மேற்கொண்டு படிக்க மிகவும் ஆசை. என் விருப்பத்தை என் கணவரிடம் தெரிவித்தேன். அதற்கென்ன படியேன் என்று கூறி என்னை தினமும் பள்ளியின் வாசலில் கொண்டு வந்துவிட்டு வேலைக்குச் செல்வார். நான் 12வது தேர்வில் வெற்றி பெற்றேன். அதற்குமேல் பட்டப்படிப்பு படிக்க எனக்கு ஆசை. அதையும் அவரிடம் மெதுவாகத் தெரிவித்தேன். மகிழ்ச்சியோடு ஒப்புதல் அளித்து தபால் மூலம் கற்க உதவினார். பட்டப்படிப்பு படித்து முடித்தேன்.”
“எப்படி தேர்வெல்லாம் நீங்களே சென்று எழுதி வந்தீர்களா? உங்களுக்கு வேறு யாரேனும் உதவினார்களா?”
“இல்லை. மூன்றாம் ஆண்டில் சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்கும், தேர்வு எழுதும்போதும் அவரை என்னுடைன் ஒரு மாதத்திற்கும் மேல் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்து வெளியூரில் வந்து என்னுடன் தங்கியிருந்து படிப்பை முடிக்க உதவினார் சுவாமிஜி. அதற்கு மேல் B.Ed., படிக்க ஆசைப்பட்டேன். அந்த விருப்பத்தையும் அவர் நிறைவேற்றினார். B.Ed., முடித்தேன்.”
“எனக்கு சிறுவயதிலிருந்தே ஆசிரியராகப் பணிபுரிய விருப்பம். நான் என் விருப்பத்தை அவரிடம் சொன்னேன். அவரும் பல பேரைப் பார்த்து அலைந்து நான் விரும்பியபடி ஒரு பள்ளியில் ஆசிரியர் வேலையும் வாங்கிக் கொடுத்தார். மார்க்கெட் சென்று காய்கறிகளெல்லாம் நீங்கள்தானே வாங்கி வருகிறீர்கள்?” என்றார் சுவாமிஜி. “இல்லை, அதையெல்லாம் அவர்தான் வாங்கி வருகிறார். தக்காளி என்ன விலை என்பது கூட எனக்குத் தெரியாது” என்கிறார் பெருமையுடன்.
“வீட்டு வேலைகளில் ஏதும் உதவுவாரா? காய்கறிகளெல்லாம் பெரும்பாலும் அவரே நறுக்கிக் கொடுத்து விடுவார். என்னுடைய வேலைகள் எல்லாவற்றையும் போட்டு ஒன்றாகக் கலக்குவதுதான்” என்கிறார் புன்னகையோடு. “சரி பள்ளிக்கு எவ்வாறு செல்வீர்கள்? அவரே ஸ்கூட்டரில் கொண்டுவந்து எங்கள் பள்ளியில் விட்டுவிட்டு அவருடைய அலுவலகம் சென்று விடுவார்கள்” என்கிறார் மகிழ்ச்சியாக.
“ஏனம்மா, இதற்குமேல் ஒரு கணவர் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்ன செய்யமுடியும் என்று நினைக்கிறீர்கள்? இப்படி ஒரு கணவர் கிடைத்ததற்கு நீங்கள் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவர் வாழ்வில் இதுவரை உங்களுக்கு செய்துள்ள நன்மைகளை எல்லாம் ஒரு சில நிமிடம் நினைத்துப் பாருங்களேன்” என்றார் மகரிஷி.
மகரிஷியின் வார்த்தைகளைக் கேட்டதும் சிறிது நேரம் அமைதியாயிருக்கிறார். நிறைகளை பார்க்கத் தெரியாத தன்னுடைய தவறை உணருகிறார். பிறகு, “ஆம் சுவாமிஜி என் கணவரின் பெருமைகளை நான் அறியாமல் இருந்துவிட்டேன். இதுபோன்ற ஒரு கணவர் எந்தப் பெண்ணிற்கும் கிடைப்பது அரிதுதான். என் முன்னோர்கள் செய்த பாக்கியம்தான்” என்றார் நாதழுதழுக்க. அந்த நிலையில் அவர் கண்கள் கலங்குகின்றன.
சுவாமிஜி அவரை வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறார்கள். சிறிதுகாலம் கழித்து அந்தப் பெண்மணி சுவாமிஜியைச் சந்திக்கிறார். “சுவாமிஜி இப்போதெல்லாம் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்றார்.
ஒருவர் பொறை இருவர் நட்பு என்பார்கள். பிறர் செய்த குறைகளை விட்டுவிட்டு நிறைகளை மட்டும் எண்ணிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் வாழ்வில் வசந்தம் வீசும்.
-வேதாத்திரி மகரிஷி
இந்தக் கதை, நன்றி உணர்வின் முக்கியத்துவத்தை மிக அழகாக எடுத்துரைக்கிறது. நம் வாழ்வில் நமக்குக் கிடைக்கும் சிறிய விஷயங்கள் கூட, யாரோ ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட விளைவுகளாக இருக்கலாம். அவற்றையெல்லாம் உணர்ந்து, அந்த நபருக்கு நன்றி செலுத்துவது மனதிற்கு நிறைவைத் தரும்.
பொதுவாக, மனித மனம் குறைகளை சுட்டிக்காட்டுவதிலேயே அதிக கவனம் செலுத்தும். ஆனால், நிறைகளை கவனித்து பாராட்டும்போது, உறவுகள் மேம்படும், மன அழுத்தம் குறையும், மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்தப் பெண்மணி தன் கணவரின் குறைகளை மட்டுமே பார்த்து, அவர் செய்த உதவிகளை மறந்ததால், மன உளைச்சலுக்கு ஆளானார். மகரிஷியின் அறிவுரைக்குப் பிறகு, அவர் தன் கணவரின் நிறைகளை உணரத் தொடங்கினார், அதன் விளைவாக அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறியது.
இந்தக் கதையின் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்:
- நன்றி மறவாமை: நமக்கு உதவி செய்தவர்களை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- நிறைகளை பாராட்டுதல்: மற்றவர்களின் நல்ல குணங்களையும், செயல்களையும் பாராட்டுவது உறவுகளை வலுப்படுத்தும்.
- குறைகளை மன்னித்து மறத்தல்: மற்றவர்களின் தவறுகளை மன்னித்து, அவற்றை மனதில் வைத்துக் கொள்ளாமல் இருப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும்.
- நிறைவான வாழ்க்கை: நமக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கையை எண்ணி சந்தோசப்படுவதும், மற்றவர்களுக்கு உதவுவதும் நிறைவான வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.
வேதாத்திரி மகரிஷியின் இந்த எளிய கதை, நம் வாழ்வில் நன்றி உணர்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வழிகாட்டுகிறது. இதை பின்பற்றி நாமும் நம் வாழ்வில் மன அமைதியையும், மகிழ்ச்சியையும் பெறலாம்.